18 Nov 2011

சளித்தொல்லைக்கு கருந்துளசி!


Health Benefits of Holy Basil in Siddha Medicine - Food Habits and Nutrition Guide in Tamil
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம்.
சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.
'ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment

 
Copyright © 2010 ITT Information. All rights reserved.